×

கபாலீசுவரர் கோயில் மயில் சிலை மாற்றம் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உண்மை அறியும் விசாரணை குழு: இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: கபாலீசுவரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் உருவ சிலை மாற்றம் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடராமன் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தர மோகன் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில், 2004ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அருள்மிகு புன்னைவனநாதர் சன்னதியில் மயில் வடிவத்தில் உள்ள அம்பாள் கற்சிலை மாற்றப்பட்டது தொடர்பாக ரங்கராஜன் நசிம்மன், வி.சேகர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் ஆகியவற்றில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடராமன் தலைமையில் உண்மை அறியும் விசாரணை குழு அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே நீதியரசர் தலைமையில் உண்மை அறியும் விசரணை குழு ஒன்றினை அமைக்குமாறும். அவ்விசாரணை குழுவிற்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கடராமனுடன் ஆலோசித்து நியமனம் செய்திட ஆணையருக்கு அனுமதி வழங்குமாறும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அரசை கேட்டுக் கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையினை அரசு கவனமாக பரிசீலனை செய்தது.

பரிசீலனைக்கு பின்னர், அதனை ஏற்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் உருவில் உள்ள அம்பாள் கற்சிலை மாற்றப்பட்டது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் விசாரணை குழுவினை அமைத்தும், அவ்விசாரணை குழுவிற்கு உதவி புரிய தேவையான அலுவலர்களை ஓய்வு பெற்ற நீதியரசர் வெங்கடராமனுடன் ஆலோசித்து நியமனம் செய்திட இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kabaliswarar Temple ,Peacock ,Department of Hindu Religious Affairs , Kabaliswarar Temple Peacock Statue Transformation Case: Fact-Finding Commission headed by Retired Judge: Order of the Secretary, Department of Hindu Religious Affairs
× RELATED ஜெயங்கொண்டம் அருகே வயலில் இறந்து கிடந்த மயில்